Saturday, February 27, 2010


உறவின் முகம்??

இலைமேல் விழுந்து

அரைநொடிக்குள் மறைந்து போகின்ற

மழைத்துளி தருகின்ற மகிழ்ச்சி போல்..

பூமிக்கு வந்து

மறுகனமே மரணித்துப்போன ஒரு

மழலையின் முகமாய்..

சில நிமிஷங்களே வாழ்ந்து

நம்மை சந்தோஷிக்கச்செய்து போகும்

வானவில்லின் வர்ணங்கள் போல..

அடிமட்டக் குடிகாரனுக்கு

வாழ்க்கைப்பட்ட பாவத்திற்காய்

காலம் முழுவதும் கண்ணீர் விடும் ஒரு

அப்பாவி மனைவியை போல..

எட்டு நாள் மட்டுமே

ஊரெங்கும் சுற்றி திரிந்துவிட்டு

சத்தமின்றி செத்துப் போகும்

அழகான பட்டாம் பூச்சி போல..

உலகில் உள்ள உறவுகளுக்கும்

எத்தனை முகம்கள்?

எத்தனை குணங்கள்?

எத்தனை நிறங்கள்?

ஒவ்வொரு முகத்தின் சிரிப்புக்குப் பின்னாலும்

சொல்லிக்கொள்ளாத ஒரு சோகம்,

வர்ணிக்க முடியாத ஒரு வலி,

வெளிப்படுத்தாத ஒரு வேதனை இருக்கிறது..

எல்லாம் நினைத்து அழுகின்ற போது

கடைசியில்,

கண்ணோடு உறவாடும் கண்ணீர் கூட

சில நொடிகளில்

காய்ந்துகாணாமல் தான் போகிறது.

.20100226